ஆத்தூர் மல்லிகை கரை அரசு பள்ளியில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக பிரமுகரை கைது செய்யக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லிகை கரையில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மூன்று ஆசிரியர்கள் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், திமுக பிரமுகமான ஜோதி போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்நிலையில், திமுக பிரமுகர் ஜோதியை உடனடியாக கைது செய்யக்கோரி, ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே, சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சண்முகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டு, தமிழகத்தில் நடக்கும் பாலியல் சம்பவங்களை அரசு தடுக்கக்கோரி முழக்கமிட்டனர்.
இதனிடையே, , பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் அதிமுகவினர் புகார் அளித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.