சென்னையில் இதுவரை 23 ஆயிரம் சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனையாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில், மாநகர பேருந்து உள்ளிட்டவைகளில் பயணம் மேற்கொள்வதற்கான ஒரே பயண திட்டமாக ‘சிங்கார சென்னை பயண அட்டை’ கடந்த ஜனவரி 6-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
முதற்கட்டமாக 50 ஆயிரம் அட்டைகள் பிராட்வே, சென்ட்ரல், தாம்பரம், கோயம்பேடு, திருவான்மியூர் உள்ளிட்ட 20 இடங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இதுவரை 23 ஆயிரம் சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனையாகியுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த அட்டையை பயன்படுத்தி இதுவரை 40 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணிகள், மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்து சேவைகளுக்கு அட்டையை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டையை பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் வகையில் 3 ஆயிரத்து 900 பேருந்துகளில் மின்னணு இயந்திரம் பயன்பாட்டில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.