மாநகராட்சியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க ஆட்சேபனை தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தால் மறு ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவிததுள்ளார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.
அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பக்தர்கள் அதிகளவில் வருவதால் திருச்செந்தூரில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க 120 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், மாநகராட்சியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க ஆட்சேபனை தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால் மறு ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.