கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
புவனகிரியை சேர்ந்த பல் மருத்துவம் பயிலும் மாணவரான சரண் என்பவர், சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்தில் பயணித்துள்ளார். படிக்கட்டில் நின்று பயணித்து கொண்டிருந்த அவர், தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சிகிச்சை பலனளிக்காததால் அவர் மூளைச்சாவு அடைந்த நிலையில், பெற்றோர் ஒப்புதலோடு சரணின் உடல் உறுப்புகள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு தானாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய சரணின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிதம்பரம் சார் ஆட்சியர் சந்திரசேகர், டிஎஸ்பி லாமேக் உள்ளிட்டோர் சரணின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.