புதுச்சேரி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மூடப்பட்ட தனியார் பள்ளியை திறக்க கோரி மாணவர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியின் தவளக்குப்பம் அருகே தானம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமிக்கு அந்தப் பள்ளியின் ஆசிரியர் மணிகண்டன் பாலியல் தொல்லை அளித்ததாக புகாா் எழுந்தது.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியரைத் தாக்கியதுடன், பள்ளி வாகனங்களையும் சேதப்படுத்தினர். இதனை தொடர்ந்து ஆசிரியர் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மூடப்பட்ட தனியார் பள்ளியை திறக்க கோரி மாணவர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து 2-மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தால் புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.