சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மீண்டும் ஒரு ஐஐசி கோப்பையை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
2011 உலக கோப்பை வெற்றியை தொடர்ந்து முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, கடந்த 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் வென்று அசத்தியது. ஆனால், அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஐசிசி தொடர்களில் பல நெருக்கமான வெற்றி வாய்ப்புகளை இந்தியா மிக மோசமாக பறிகொடுத்தது.
2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடனான அதிர்ச்சி தோல்வி, 2023-ம் ஆண்டு சொந்த மண்ணில் உலக கோப்பை தொடரில் வெற்றி வாய்ப்பை இழந்தது என இந்திய அணியின் WORST FORM கிரிக்கெட் ரசிகர்களின் தலையில் இடியாக இறங்கியது.
இனி ஐசிசி கோப்பைகளை வெல்வதற்கான இந்திய அணியின் கனவு வெறும் கனவாக மட்டுமே இருந்து விடுமா என விமர்சனங்கள் எழுந்தபோது, கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை தொடரை வென்றுகாட்டி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர், கிரிக்கெட் ரசிகர்களின் மனக்காயங்களுக்கு மருந்து போட்டனர்.
அதேநாளில், டி20 கிரிக்கெட்டில் இருந்து நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கூட்டாக ஓய்வை அறிவித்தது அவர்களது ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது. மும்பையில் கோப்பையுடன் வலம் வந்த இந்திய அணி வீரர்களை காண அங்கு திரண்ட கிரிக்கெட் ரசிகர்கள், 10 ஆண்டுகள் எதிர்பார்த்து காத்திருந்த கோப்பை வேட்கையால் வெற்றி மகிழ்ச்சியை கொண்டாடி தீர்த்தனர்.
ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணிக்கு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற ஆஸ்திரேலிய அணியுடன் பலப்பரீட்சை நடத்த வேண்டியிருந்தது.
பார்டர் கவாஸ்கர் தொடரில் வாழ்வா சாவா ஆட்டங்களை எதிர்கொண்ட இந்திய அணி, 3 – 1 என தொடரை இழந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறினர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக இந்திய அணியினர் ஏமாற்றம் அளித்த நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை தற்போது சாம்பியன்ஸ் கோப்பை பக்கம் திரும்பியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கவுள்ள இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை அண்மையில் அறிவித்தது பிசிசிஐ. இந்திய அணியின் ஐசிசி கோப்பை வேட்கையை ஈடுகட்டவும், கடந்த தொடரில் பாகிஸ்தான் அணியுடனான தோல்விக்கு பழி தீர்க்கவும், இம்முறை இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் இந்திய அணி குறிப்பிடத்தக்க வெற்றிகளை பதிவு செய்யவில்லை என்பதாலும், அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் வரும் முதல் ஐசிசி தொடர் என்பதாலும், இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது எனலாம்.