டெல்லி முதலமைச்சர் பதவியேற்பு விழா வரும் 20-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, ராம்லீலா மைதானத்தில் விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பான கூட்டம் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் டெல்லி சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் பதவியேற்பு விழாவையொட்டி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட மேடையுடன் கூடிய பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதில் பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.