திண்டுக்கலில் இடத்திற்கான ஆவணம் கேட்டு பலமுறை அலைக்கழிக்கப்பட்டதால் மாவட்ட ஆட்சியரின் கார் கண்ணாடியை உடைத்த பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பழனி கஞ்சநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான கணேசன் என்பவர், பழனியில் உள்ள தனது 3 சென்ட் இடத்திற்கு வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதற்காக அவர் கொடுத்த ஆவணத்தை சரிபார்த்த வங்கி நிர்வாகம், இடத்தின் மீது உரிய உரிமைகள் வரவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதனால் தனது இடத்தின் மீது தடையில்லா சான்று வழங்கும்படி கடந்த மாதம் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கணேசன் மனு அளித்துள்ளார். இந்த மனு மீது மாவட்ட நிர்வாகமும், பத்திரப்பதிவுத்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமிற்கு சென்ற அவர், மீண்டும் முறையிட்டுள்ளார். ஆனால் நேற்றும் நடவடிக்கை எடுக்காததால் இரவு வரை காத்திருந்த கணேசன் ஆத்திரத்தில் மாவட்ட ஆட்சியரின் கார் கண்ணாடியை அடித்து உடைத்தார். அப்போது பாதுகாப்பு பணியலிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.