வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த 300 கன அடி தண்ணீர் நிறுத்தப்பட்டது.
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு வைகை நீர் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த 5 மாதங்களாக தேனி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 160 கன அடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருவதால் பாசனத்திற்கு திறக்கப்பட்டு வந்த 300 கன அடி தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 63.27 அடியாகவும், நீர்வரத்து 160 கன அடியாகவும் உள்ளது.