சென்னையில் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருவாய் குறைவான பேருந்துகள் விடியல் பயணத்திற்கு மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் நாள்தோறும் மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் உட்பட மூன்றாயிரத்து 232 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளாக ஆயிரத்து 500 பேருந்துகள் வரை இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் பெண் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக 174 மாநகரப் பேருந்துகள் விடியல் பயணத் திட்டப் பேருந்துகளாக மாற்றப்பட உள்ளன.
பயணியர் எண்ணிக்கையும் , வருவாயும் குறைவாக உள்ள வழித்தட பேருந்துகள் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளாக மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.