உரிய இழப்பீடு வழங்காததன் காரணமாக பரமக்குடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
சிவகங்கையைச் சேர்ந்த வினோத் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தில், பரமக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த வினோத் உரிய இழப்பீடு கோரி பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மனுதாரருக்கு 14 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால், போக்குவரத்து கழகத்தினர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இழப்பீடு தொகையை வழங்க காலதாமதம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பேருந்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களுடன் பேருந்தில் இருந்த பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், பயணிகளுக்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்ட பின் நீதிமன்ற ஊழியர்கள் பேருந்தை ஜப்தி செய்து சென்றனர்.