தமிழகத்தில் பெண் காவலர்களுக்கு காவல் நிலையத்தில் கூட பாதுகாப்பில்லை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் உள்ள பிரசித்திபெற்ற பால சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வானதி சீனிவாசன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
புதிய கல்வி கொள்கை திட்டம் பாஜக-வின் திட்டம் அல்ல எனவும், பல கல்வி நிபுணர்கள் சேர்ந்து கொண்டு வந்த ஒரு நல்ல திட்டம் எனவும் தெரிவித்தார்.
அரசியல் கட்சியினர் நடத்தும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படும்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்பட கூடாதா என கேள்வி எழுப்பினார்.
புதிய கல்வி கொள்கையில் இந்தி, தெலுங்கு, கன்னடம் என எந்த விருப்ப மொழியை வேண்டுமானாலும் மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம் என கூறியிருப்பது மொழித்திணிப்பு அல்ல, அது அவர்களுக்கான வாய்ப்பு எனவும் அவர் தெரிவித்தார்.