தமிழகத்தில் இருந்து முதன் முறையாக காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க 220 பெண்கள் போலீசார் பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றனர்.
தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் விதமாக கடந்த 2023-ம் ஆண்டு முதல் காசி தமிழ் சங்கமம் நிகழ்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான காசி தமிழ் சங்கம நிகழ்விற்கும் தமிழ்நாட்டில் இருந்து பொதுமக்கள் அனுப்பப்பட்டு வரும் நிலையில், இதுவரை இல்லாத வகையில் பெண்கள் மட்டுமே பிரத்தியேக பிரிவில் காசிக்கு செல்ல சென்னை ஐஐடி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், உழைக்கும் பெண்களை கவுரவிக்கும் வகையிலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 5 ரயில்வே போலீசார் பாதுகாப்புடன், 220 பெண்கள் காசிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது பிரதமர் மோடியின் சிறப்பு திட்டத்தால் காசிக்கு செல்ல வேண்டும் என்ற பலநாள் கனவு நிறைவேறியுள்ளதாக அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.