இனி, வெறும் 600 ரூபாய் பயணக் கட்டணத்தில் 3 மணி நேரத்தில், சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு பயணம் செல்ல முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? இதை சாத்தியமாக்கி சாதனை படைத்துள்ளது மெட்ராஸ் IIT. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஐஐடி மெட்ராஸில் நிறுவப்பட்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம்தான் வாட்டர்ஃபிளை டெக்னாலஜிஸ். இது, முதல் மின்சார பந்தய காரை உருவாக்கிய நிறுவனமாகும். இந்நிறுவனம், வழக்கமான விமானம் மற்றும் கப்பல் பயணத்துக்கு ஒரு நிலையான மாற்று தேடியது. அதன் விளைவாக, (electric seagliders) மின்சார ஸிகிளைடர்களை உருவாக்கியது. குறைந்த செலவில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை செயல் படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்த seagliders, (Wing-in-Ground) விங்-இன்-கிரவுண்ட் கிராஃப்ட் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, இது ஒரு மின்-பறக்கும் படகு ஆகும். இந்த மின்-பறக்கும் படகு தட்டையான வடிவில் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த seagliders தண்ணீரில் இருந்து புறப்படுகிறது. சுமார் நான்கு மீட்டர் உயரத்தில் பறக்கிறது. அதே உயரத்தைத் தொடர்ந்து பராமரிக்கிறது.
இந்த மின்-பறக்கும் படகு தட்டையான வடிவில் உருவாக்கப் பட்டுள்ளது. 150 மீட்டர் உயரம் வரை பறக்க வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது.தனது செயல்திறனுக்காக தரையிலிருந்து உந்துதலைப் பெறுகிறது. ஆரம்பத்தில் பேட்டரி ஆற்றலால், மணிக்கு 500 கிலோமீட்டர் தூரத்தை எட்டும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து,இந்த மின் பறக்கும் படகு, ஹைட்ரஜன் மூலம் உருவாகும் மின்சாரத்தால், 2,000 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டவையாகும்
பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ இந்தியா கண்காட்சியில், வாட்டர்ஃபிளை டெக்னாலஜிஸ் இந்த முன்மாதிரியுடன் கூடிய மின்-பறக்கும் படகு வடிவமைப்பு காட்சிப்படுத்தப்பட்டது.
இன்னும் இரண்டு மாதங்களுக்குள், 100 கிலோ முன்மாதிரியையும் வரும் டிசம்பர் மாதத்துக்குள் ஒரு டன் முன்மாதிரியை உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. 20 இருக்கைகள் கொண்ட நான்கு டன் எடையுடன் கூடிய மின்-பறக்கும் படகு அடுத்த ஆண்டுக்குள் தயாராகும் என்று கூறப் பட்டுள்ளது.
கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மின்-பறக்கும் படகு மூலம் 1,600 கிலோமீட்டர் பயணத்துக்கு ஒரு டிக்கெட்டின் விலை 600 ரூபாய் மட்டுமே. இது குளிர்சாதன வசதியுடைய ரயில் டிக்கெட்டை விட மிகவும் மலிவானது என்பது குறிப்பிடத் தக்கது.
அடுத்த ஆண்டுக்குள் சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) கீழ் இந்திய கப்பல் போக்குவரத்துப் பதிவேட்டில் (IRS) சான்றிதழைப் பெற முயற்சி செய்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் இராணுவ பயன்பாட்டுக்கான மின் பறக்கும் படகை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
2029ம் ஆண்டுக்குள் இந்நிறுவனம், துபாய் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரையிலான முதல் கண்டம் விட்டு கண்டம் மின் பறக்கும் படகை உருவாக்க உள்ளது.