சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்த 20 லட்சம் ரூபாய் வழிப்பறி சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட, 3 வருமான வரித்துறை அதிகாரிகளின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் முகமது கௌஸ் என்பவரிடம், கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 3 வருமான வரித்துறை அதிகாரிகள், காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் 3 வருமான வரித்துறை அதிகாரிகள் உட்பட 4 பேருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில்,
முக்கிய குற்றவாளியான சன்னிலாய்டு என்பவரிடம் நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராயபுரத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரிடமும் இதே கும்பல் 20 லட்சம் ரூபாய் பணம் பறித்ததும் அதனை பகிர்ந்துகொண்டதும் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் பதிவு செய்த வழக்கில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேரும் மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் விசாரணை முழுமையடையாத நிலையில், வருமான வரித்துறையினரும், காவல்துறையினரும் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது என வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி 3 வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார்.