சென்னை ஆயிரம் விளக்கு பகுதியல் 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்கள் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்ததாக காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு ஆகியோர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணைக்கு ஆஜரான காவல்துறை தரப்பு, வழக்கின் புலன் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்றும், காவல்துறை, வருமானவரித்துறை, வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதால் முழுமையாக விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.
மேலும் காவல் ஆய்வாளர் சன்னிலாய்டு அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், 20 லட்சம் ரூபாயை அனைவரும் பகிர்ந்து கொண்டதாகக் கூறியுள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது என வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, காவல் ஆய்வாளர்கள் ராஜாசிங், சன்னிலாய்டு இருவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.