இந்திய இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என Zoho மற்றும் ஸ்டார்ட் அப் சிங்கம் ஆகிய நிறுவனங்களின் இணை நிறுவனர் குமார் வேம்பு தெரிவித்துள்ளார்.
புதிதாக தொழில் தொடங்கும் இளம் தொழில் முனைவோர்கள் தங்களுடைய தொழில் தொடர்பான திட்டங்களை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக ஸ்டார்ட் அப் சிங்கம் என்ற தனியார் நிறுவனத்தின் ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் முதலீட்டாளர்கள் குமார் வேம்பு, ஹேமச்சந்திரன், பாலச்சந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் இந்நிறுவனத்தின் வேல்யூகார்ன் திட்டத்தின் மூலம் ஆலோசனைகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமார் வேம்பு மத்திய அரசு இளம் தலைமுறைக்காக ஸ்டார்ட் அப் திட்டங்களை ஊக்குவிப்பதாக தெரிவித்தார். மேலும் இந்தியா வளர்ந்த நாடாக உருவாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஸ்டார்ட்அப் சிங்கம் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஹேமச்சந்திரன், தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பல யோசனைகள் உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க உள்ள இளைஞர்களுக்கு முதலீடு செய்து அவர்களை ஊக்குவிப்பதே ஸ்டார்ட் அப் சிங்கத்தின் நோக்கம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய பாலச்சந்தர், இளைஞர்கள் மத்தியில் தொழில்திறனை வளர்க்க வேண்டும் என்பதுதான் தங்களது முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார். மேலும் தொலைக்காட்சிகளில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம் பெற்றோர்களுக்கும், இளைஞர்களுக்கும் தொழில் தொடங்குவதில் ஆர்வம் வரும் என்றும் கூறினார்.