பலுசிஸ்தான் மாகாணத்தின் ஏழு மாவட்டங்கள் விடுதலையை அறிவிக்கக்கூடும் என்று பாகிஸ்தான் மதகுருவும், நாடாளுமன்ற உறுப்பினருமான மௌலானா ஃபஸ்லுர்-ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுதலைப் பிரகடனத்தை ஐநா சபை ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதனால், பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு நிலவுகிறது
வடமேற்கு பாகிஸ்தானின் குர்ரம் பகுதியில் வன்முறைத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சன்னி மற்றும் ஷியா இஸ்லாமியர்களுக்கு இடையே மோதல்கள் நடக்கின்றன. கடந்த நவம்பரில் மீண்டும் வன்முறை வெடித்ததில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
லோயர் குர்ரம் பகுதியில் அலிசாய் மற்றும் பாகன் பழங்குடியினருக்கு இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் நடக்கின்றன. கடுமையான பதற்றம் காரணமாக குர்ராமில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இரு தரப்பினரும் கனரக மற்றும் தானியங்கி ஆயுதங்களால் தாக்கிக் கொள்வதும், கடைகள், வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களும் தீ வைத்து கொளுத்தப்படுகின்றன.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல், அந்த பகுதி முழுவதும் வெளியுலக தொடர்பின்றி உள்ளது.
கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல், பலமுறை, போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், இன்னமும் வன்முறை தாக்குதல்கள் தொடர்கின்றன.
உள்ளூர் வணிகர்களுக்கு அரிசி, மாவு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை வழங்குவதற்காக வந்த 33 வாகனங்களும் மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகளை ஏற்றிச் செல்லும் இரண்டு வாகனங்களும் குறிவைத்து தாக்கப்பட்டன. இந்த தாக்குதல்களில்,10க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டுள்ளனர்.மேலும் 6 ஓட்டுனர்கள் கடத்தப் பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, பாகிஸ்தான் அரசு கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் தனது உரிமையை முற்றிலுமாக இழந்துவிட்டது என்று பாகிஸ்தான் மதகுருவும் நாடாளுமன்ற உறுப்பினருமான மௌலானா ஃபஸ்லுர்-ரஹ்மான் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், கனிம வளங்கள் நிறைந்திருக்கும் இந்தப் பகுதிகள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பது பாகிஸ்தானுக்கே பெரும் பிரச்னையாக மாறும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய மௌலானா ஃபஸ்லுர்-ரஹ்மான், பலுசிஸ்தானின் பல பகுதிகள் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து செல்லத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், பலுசிஸ்தான் மாகாணத்தின் ஏழுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் விடுதலையை அறிவிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, பலுசிஸ்தானில் உள்ள மாவட்டங்கள் விடுதலையை அறிவித்தால், ஐநா சபை அந்த மாவட்டங்களின் விடுதலையை ஏற்றுக்கொள்ளும் என்றும், அதுவே பாகிஸ்தானின் வீழ்ச்சியாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.