திருப்பூர் அருகே வாழை இலையில் விஷம் கலந்து உணவு வைத்து 14 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கேயம் சாலையிலுள்ள வண்ணாந்துறை புதூர் பகுதியில் பல நாய்கள் மற்றும் கோழிகள் கொல்லப்பட்டதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவிநாசிப்பாளையம் போலீசார் உதவியுடன் சம்பவ இடத்திற்குச் சென்று விலங்குகள் நல ஆர்வலர்கள் விசாரணை நடத்தினர்.
அப்போது அப்பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருந்ததும், சுமார் 15 வளர்ப்பு கோழிகளை அவை கடித்து கொன்றதும் தெரியவந்தது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களே வாழை இலையில் விஷம் கலந்த உணவு வைத்து 14 நாய்களை கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், பொதுமக்களே அவற்றை அப்பகுதியில் புதைத்திருந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் போலீசார் புதைக்கப்பட்ட நாய்களின் உடல்களை தோண்டி எடுத்தனர். அவற்றுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யும் பணியை போலீசார் தொடங்கியுள்ளனர்.