டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா இன்று பதவியேற்கிறார்.
70 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட டெல்லிக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து பிப்ரவரி 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பாஜக 48 தொகுதிகளில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியது.
ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டும் வென்று ஆட்சியை இழந்தது. குறிப்பாக புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜகவின் பர்வேஷ் வர்மா 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்நிலையில், தலைநகரின் அடுத்த முதலமைச்சர் யார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக டெல்லியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், புதிய முதலமைச்சராக சாலிமர் பாக் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ரேகா குப்தா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இன்று மதியம் 12.35 மணி அளவில் ரேகா குப்தா முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தாவுக்கு பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.தொடர்ந்து ரேகா குப்தாவின் இல்லம் முன்பு பாஜக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்த ரேகா குப்தா,
டெல்லியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி நகருக்கு பொற்காலம் வரப்போகிறது என தெரிவித்தார். தம்மை முதல்வராக தேர்ந்தெடுத்த பாஜக மூத்த தலைவர்களுக்கும், பிரதமர் மோடிக்கும் அவர் நன்றி கூறினார்.