மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து தரம் தாழ்ந்து கருத்து தெரிவித்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மும்மொழிக் கொள்கைக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற போர்வையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அடிப்படை மாண்பின்றி ஒருமையில் சாடியதோடு,சாதிய ரீதியாகவும் விமர்சித்த வேல்முருகனின் அநாகரிகப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை” என பெண் உரிமைகளைப் பறைசாற்றிய பாரதி பிறந்த மண்ணில், பெண் தலைவர் மீது தொடர்ந்து சொல்லெறியும் தங்களின் ஆணாதிக்க மனப்போக்கு ஆபத்தானது மட்டுமன்றி, வெட்கக்கேடானது என்றும் தெரிவித்துள்ளார்.
பெண் தலைவர்களைக் கொச்சைப்படுத்துமளவிற்கு ஆணவம் தங்கள் அறிவுத் திறனை மழுங்கடித்துவிட்டதா என்றும் வேல்முருகனுக்கு வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், தவறை உணர்ந்து உடனடியாக மக்கள் மன்றத்தில் வேல்முருகன் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் எனவும் அந்தப் பதிவில் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.