நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு அருகே குரங்குகளின் அட்டகாசத்தால் பள்ளி செல்லும் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஜமீன் சிங்கம்பட்டியில் வெள்ளைமந்திகள் மற்றும் குரங்குகள் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. குரங்குகள் அதிகாலையிலேயே வீடுகளின் மேற்கூரைகளில் ஏறி ஓடுவது, மரங்களில் இருந்து பழங்களை பறித்து வீசுவது, தென்னை மரங்களில் ஏறி இளநீரையும் தேங்காயையும் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.
வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களையும் அபகரிக்கின்றன. அத்துடன் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களையும் துரத்தி அச்சுறுத்துவதால், குரங்குகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.