சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பராமரிப்பில்லாத அரசு பேருந்துகள் அடிக்கடி மலை பாதையில் பழுதாவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சிங்கம்புணரியில் இருந்து ஒடுவன்பட்டி மலைப்பாதை வழியாக பொன்னமராவதிக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பொன்னமராவதி நோக்கி ஒடுவன்பட்டி மலைப்பாதையில் அரசுப் பேருந்து சென்றபோது நடுவழியில் பழுதாகி நின்றது.
உடனே பேருந்து பின்னால் சென்றுவிடாமல் இருக்க அதன் சக்கரங்களில் பாறாங்கல்லை வைத்து பயணிகள் நிறுத்தி வைத்தனர். பின்னர், அனைவரும் வேறு வழியில்லாமல் 4 கிலோமீட்டர் துாரம் நடந்தே சென்றனர்.
இந்த வழித்தடத்தில் அரசு பேருந்து பழுதாவது வாடிக்கையானது என்றும், இதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.