உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான நிதி உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இந்தியா வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளுக்கான பல கோடிக்கணக்கான அமெரிக்க நிதியுதவியை ரத்து செய்வதாக அமெரிக்காவின் அரசு செயல் திறன் மேம்பாட்டு துறை (DOGE) அறிவித்துள்ளது. இந்தியா, வங்கதேசத்துக்கு வழங்கப்பட்ட அமெரிக்க நிதியுதவி ஏன் நிறுத்தப்பட்டது ? அதன் பின்னணி என்ன என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சர்வதேச வளர்ச்சிப் பணிகளுக்காக நிதி உதவி செய்வதில் உலகின் மிகப்பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது. இந்த வகையில் மனிதாபிமான உதவிகள் செய்வதில் நான்காவது இடத்தில் பிரிட்டன் உள்ளது. 2023ம் ஆண்டில், பிரிட்டன்15.3 பில்லியன் பவுண்டுகள் மதிப்புக்கு உதவிகள் செய்துள்ளது. இது அமெரிக்கா செலவிட்ட உதவித் தொகையில் நான்கில் ஒரு பகுதியே ஆகும்.
1960களில் அமெரிக்க அரசு, USAID என்ற அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தைத் தொடங்கியது. 1961ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. 1998ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் மூலம் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் தன்னாட்சி பெற்றது.
இந்த அமைப்பில் 10,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். இதற்கு 60 நாடுகளில் கிளைகள் உள்ளன. சுமார் 12 நாடுகளில் தீவிரமாக சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அரசு சாரா பிற அமைப்புக்களுடன் ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது அந்த அமைப்புக்களுக்கு நிதி உதவி செய்தோ இந்த பணிகள் நடைபெற்று வந்தது. அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்ற உடனேயே, அனைத்து சர்வதேச நிதி உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
USAID ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, இந்த அமைப்பு அமெரிக்க அரசின் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் தலைவரானார்.
இந்நிலையில்,இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சீர்குலைக்க தொழிலதிபர் ஜார்ஜ் சொரோஸ் USAID மானியங்களைப் பயன்படுத்தினார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளில், ஜார்ஜ் சொரோஸ் நிறுவனங்களுக்கு 270 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் வழங்கியதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக ஜார்ஜ் சொரோஸின் East-West Management Institute, Soros’s Open Society Foundations ஆகியவை அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து அதிக நிதியைப் பெற்றதாக தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த நிதியை இலங்கை, வங்கதேசம், உக்ரைன், சிரியா, ஈரான், பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தவும், ஜனநாயக அரசை மாற்றவும், தனிப்பட்ட ஆதாயத்துக்காகவும் பயன்படுத்தியதாக தெரிவிக்கிறது.
இந்திய தேர்தல்களில் வாக்காளர்கள் வாக்களிக்கும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட 21 மில்லியன் டாலர் திட்டத்தையும், வங்க தேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் 29 மில்லியன் டாலர் உதவியையும் நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக எலான் மஸ்க்கின் அரசு செயல்திறன் துறை (DOGE) அறிவித்துள்ளது.
இந்நிலையில், அக்னிவீர் யோஜனா போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக நாட்டில் போராட்டத்தைத் தூண்டியதும், சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் நக்சல் இயக்கத்தை ஆதரிக்கும் அமைப்புக்களும் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்தே நிதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்க அரசால் ரத்து செய்யப்பட்ட அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து நிதி பெற்றவர்கள் யார் யார் என்பதைக் கண்டறியவும், அவர்களைச் சிறையில் அடைக்கவும், இந்த விஷயத்தில் அரசு முழுமையான விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவை சீர்குலைக்க ஜார்ஜ் சோரோஸ் நடத்தும் ஓபன் சொசைட்டி அறக்கட்டளைக்கு அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் 5,000 கோடிரூபாய் வழங்கியதா? என்றும், அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஜார்ஜ் சோரோஸ் அறக்கட்டளை இரண்டும், ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பணம் கொடுத்ததா? என்பது பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் துபே வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டு நன்கொடை சர்ச்சையை மத்திய அரசு தவிர்க்கவில்லை என்றும், இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பல NGOக்களுக்கு நாட்டில் FCRA அனுமதி தேவையில்லாமல் வழங்கப்பட்டுள்ளதால்,அந்த NGOக்களின் FCRA உரிமங்களை ரத்து செய்ய மத்திய அரசு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
வரும் ஆண்டுகளில், ராகுல் காந்தியும் காங்கிரஸும், இந்தியாவை விற்க விரும்பும் ஒரு அரசியல் அமைப்பு என்பது வெட்ட வெளிச்சமாகி விடும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.