சிவகங்கையில் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
ஆழிமதுரை கிராமத்தை சேர்ந்த 2 சிறுமிகள் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தனர். அங்கன்வாடி மையத்தில் கழிப்பறை வசதி இல்லாததால் இயற்கை உபாதையை கழிக்க அவர்கள் கண்மாய்க்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி சிறுமிகளின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இதற்கு காரணமான ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.