அண்ணா அறிவாலயத்திற்கு வரக்கூடாது என சொல்வதற்கு அது என்ன ரெட் லைட் ஏரியாவா என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடசேரியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த , பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாகவும், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்றும் சமூக வலைதளங்களில் தினசரி விவாதம் மட்டுமே நடைபெறுவதாக கூறினார்.
உலக செய்திகளை மிஞ்சும் அளவிற்கு கொலை ,கொள்ளை, கற்பழிப்புபோன்றவை நடைபெறுவதாகவும், தமிழக முதலமைச்சர் தினசரி பத்திரிகைகளை படிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
2026 தேர்தலில் திமுக அரசு தமிழகத்தில் இருக்காது. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். மக்கள் கொதித்து போய் உள்ளனர். திமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களே அனைத்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்ததது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், அண்ணாமலை எதற்கு செல்ல வேண்டும் என்றும் தானே நேரில் செல்வதாகவும் கூறினார்.
நான் வருகிறேன் வரக்கூடாது என சொல்வதற்கு அண்ணா அறிவாலயம் என்ன ரெட் லைட் ஏரியாவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். உதயநிதி ஸ்டாலின் தனது வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும் என்றும் இது கேவலமான ஒரு செயல் என பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.
















