டெல்லியில் முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் பதவியேற்றுக்கொண்ட அனைத்து அமைச்சர்களுக்கும் இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
டெல்லியில் முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையிலான அரசு நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், டெல்லி தலைமை செயலகத்தில் அவரது தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டமும் நடைபெற்றது.
அதில் 5 லட்சம் ரூபாய் டாப்-அப் வசதிகளுடன் கூடிய புதிய ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகவும், நிலுவையில் உள்ள 14 சி.ஏ.ஜி அறிக்கைகளை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்வது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது. தொடர்ந்து பதவியேற்றுக்கொண்ட புதிய அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதன்படி, முதலமைச்சர் ரேகா குப்தா பொது நிர்வாகம், சேவைகள், நிதி, வருவாய், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு, நிலம் மற்றும் கட்டடம், ஊழல் தடுப்பு, திட்டமிடல் மற்றும் பிற ஒதுக்கப்படாத துறைகளை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் முதலமைச்சர் ரேகா குப்தா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதல் அமைச்சரவை கூட்டத்தில் புதிய ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் எனவும் தெரிவித்தார்.