திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா நடைபெற உள்ள நிலையில் புதிதாக போடப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலையை உடைத்ததை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி கோயிலில் வருகிற மார்ச் 3ஆம் தேதி மாசித் திருவிழா தொடங்குவதுடன், மார்ச் 12ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் நகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தெற்கு ரத வீதியில் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி புதிதாக போடப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தேர் செல்லும் ரத வீதியில் சாலையினை உடைத்து சேதப்படுத்திய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன்பு, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு பணம் வீணடிக்கப்படுவதாக கூறி பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.