சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் 2-வது போட்டியில் இந்தியா – வங்கதேசம் ஆகிய அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் களமிறங்கியது. துவக்கம் முதலே தடுமாறிய அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், நிதானமாக ஆடிய தௌஹித் ஹிரிடோய் – ஜாகிர் அலி ஜோடி வங்கதேச அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ஜாகிர் அலி 68 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், பொறுமையை கைவிடாத தௌஜித் ஹிரிடோய் சதம் விளாசி பின் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, வங்கதேச அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ரோகித் ஷர்மா 41 ரன்களும், விராத் கோலி 22 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 15 ரன்களும். அக்சர் பட்டேல் 8 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் சதம் விளாசி அசத்திய நிலையில், அவருடன் அணி சேர்ந்த கே.எல்.ராகுலும் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் இந்திய அணி 46.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 6 வெக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.