இன்று ஸ்ரீ அன்னையின் 146வது அவதார நாளாகும். ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில், ஸ்ரீஅன்னையும் ஸ்ரீஅரவிந்தரும் சீடர்களுக்குத் ‘தரிசனம்’ அளிக்கும் நான்கு நாட்களில், ஸ்ரீ அன்னையின் அவதார நாளும் ஒன்றாகும். அன்பு, கருணை,பண்பு, தெய்வ அர்ப்பணிப்பு ஆகிய நற்குணங்களின் வடிவமாக விளங்கிய ஸ்ரீ அன்னை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கொல்கத்தாவில் பிறந்து, லண்டனில் கல்விபெற்று, தாய்நாடு திரும்பி, சுதந்திரப் போராட்டத் தலைவரானவர் ஸ்ரீஅரவிந்தர். அலிப்பூர் குண்டுவீச்சு வழக்கில் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான பின் புதுச்சேரிக்குப் போ என ஸ்ரீ கிருஷ்ணரின் குரல் உத்தரவிட்டது. அதன்படி, 1910 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரி தவம் இயற்றினார் ஸ்ரீஅரவிந்தர்.
ஸ்ரீ அரவிந்தரின் முதன்மையான சீடராக இருந்தவர் ஸ்ரீ அன்னை. 1878 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 21ஆம் தேதி, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஸ்ரீ அன்னை பிறந்தார். ஸ்ரீ அன்னைக்குப் பெற்றோர் வைத்த பெயர் மிர்ரா அல்ஃபாஸா ஆகும். ஐந்து வயதிலேயே, ஸ்ரீ அன்னைக்கு பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. கூடவே யோக வாழ்விலும் ஒரு ஈர்ப்பு உண்டானது.
சிறு வயது முதலே தினந்தோறும் தியானம் புரிவதும், தியானத்தில் இறைவன் அருளொளியைத் தரிசிப்பதும் ஸ்ரீ அன்னைக்கு இயல்பாக அமைந்திருந்தது.தியானத்தில் கண்ட இறை ஒளிக்கு ஸ்ரீ அன்னை, கிருஷ்ணா என பெயரிட்டுக் கொண்டார்.
சிறுமியாக இருந்த ஸ்ரீ அன்னைக்கு நாளும் ஒரு கனவு வருவதுண்டு. அந்த கனவே ஸ்ரீ அன்னை ஒரு அவதாரம் என்பதைக் காட்டும்.
கனவில்,தன் உடலை விட்டு வெளியேறி சூட்சும வடிவில், எங்கோ விண்வெளியில் சஞ்சரிப்பார். ஒளி வீசும் ஸ்ரீ அன்னையின் உடலை ஒளிமயமான ஒரு ஆடை தழுவி நிற்கும்.
அப்போது, உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், நோயுற்றவர்கள், துன்பமுற்றவர்கள், என எல்லோரும் ஸ்ரீ அன்னையைச் சுற்றி நிற்பார்கள்.
தனது கருணை பொங்கும் விழிகளால் சிறுமியான ஸ்ரீ அன்னை அவர்களைப் பார்ப்பார். ஸ்ரீ அன்னையின் ஒளிமயமான ஆடையைத் தொட்டவுடன் சிலருக்கு நோய் நீங்கும். துன்பத்தில் உள்ளவர்கள் இன்பம் அடைவார்கள். மிக்க மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் அவர்கள் அனைவரும் திரும்பி செல்வார்கள்.
அதேபோல், சிறுமியான ஸ்ரீ அன்னை, ஒளி வீசும் கண்களுடன் நீண்ட தாடியுடன் ஒரு ரிஷியை தன் கனவில் அடிக்கடி கண்டார். பாரத பண்பாடு, பாரத தத்துவங்கள், வேதங்கள் , உபநிடதங்கள் குறித்து, ஸ்ரீ அன்னைக்கு அந்த ரிஷி தான் எடுத்துரைத்தார்.
திருமணமாகி ஓர் ஆண் குழந்தைக்குத் தாயான பிறகு ஸ்ரீ அன்னை, 1914 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்தபோது, தனக்கு கனவில் வந்து உபதேசித்த ரிஷி ஸ்ரீ அரவிந்தரே என்றும், இவரே தனது குருநாதர் என்றும் ஸ்ரீ அன்னை கண்டுகொண்டார்.
கணவரின் பணி காரணமாக பாரீஸிலும், ஜப்பானிலும் சிலகாலம் வாழ்ந்து வந்தார் ஸ்ரீ அன்னை. குருநாதரின் நினைப்பும், பகவான் கிருஷ்ணரின் அருளும் ஸ்ரீ அன்னையை 1920 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மீண்டும் வரவைத்தது.
அதன் பிறகு,பாண்டிச் சேரியிலேயே தங்கி இருந்து, ஸ்ரீ அரவிந்தருக்கு ஆன்மீக வாழ்வில் உறுதுணையாக இருந்து வந்தார் ஸ்ரீ அன்னை. புதிய ஆன்மீக மையமாக, ஸ்ரீஅரவிந்த ஆசிரமத்தை 1926-ஆம் ஆண்டு ஸ்ரீ அன்னை உருவாக்கினார். பாரீசில் தனக்கு இருந்த சொத்துக்களை எல்லாம் விற்று ஸ்ரீ அன்னை இந்த ஆசிரமத்தை ஏற்படுத்தினார்.
ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களை எல்லாம் ஸ்ரீ அன்னை பதிப்பித்தார். மேலும்,1968ஆம் ஆண்டு, உலக அமைதிக்கான ஒரு மாபெரும் மையமாக ஆரோவில் நகரத்தை ஸ்ரீ அன்னை உருவாக்கினார்.
ஸ்ரீ அரவிந்தர் மகாசமாதி அடைந்தபிறகு ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக முறையை அன்பர்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலும், அன்பர்கள் வாழ்வில் ஞானஒளி மலரவும்ஆன்மீக பணி செய்திருந்தார் ஸ்ரீ அன்னை.
1973ம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி ஸ்ரீ அன்னை மகா சமாதியானார். ஸ்ரீ அன்னையின் பூத உடல் சமாதியில் அடக்கம் செய்யப்பட்டு விட்ட போதிலும், இன்றும் சூட்சும ரூபத்தில், அன்பர்களுக்கு அருள் புரிந்து வருகிறார் ஸ்ரீ அன்னை.
அன்னையின் அவதார தினத்தில், அன்னையின் சமாதி வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும். மேலும், ஆசிரமத்தில் அன்னை பயன்படுத்திய அறை மற்றும் பொருட்கள் அன்பர்களின் தரிசனத்துக்குத் திறக்கப் படும்.
நீ எப்படி இருந்தாய் என்பது பற்றிக் கவலை பட்டுக் கொண்டு இருக்காதே. எப்படி இருக்க போகிறாய் என்பதை மட்டுமே நினைவில் கொள். நீ நிச்சயம் முன்னேறுவாய் என்று கூறிய ஸ்ரீ அன்னையின் அவதார நாளில், ஸ்ரீ அன்னையை மலர்களால் வணங்கி மகிழ்வோம்.