பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கட்டட ஒப்பந்ததாரரிடம் இருந்து 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகே பழனி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியினை ஒப்பந்ததாரர் செந்தில்குமார் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கட்டிட பணிக்காக 21 லட்சம் ரூபாய் காசோலை கேட்டு கோயில் கட்டட பிரிவு செயற்பொறியாளர் பிரேம்குமாரை அணுகியுள்ளார்.
அப்போது அவர் 18 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனமில்லாத ஒப்பந்ததாரர் செந்தில்குமார், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செயற்பொறியாளரிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.