ஸ்பெயின் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள அஜித்குமார், நடிப்பு மட்டுமின்றி கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அவரது குழு 3-ம் பரிசை தட்டிச் சென்றது.
அதேநேரம் துபாய் பந்தயத்தின் போது அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற கார் பந்தயத்திலும் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார்.
அப்போது டிராக்கில் முந்திச் செல்ல முயன்ற நிலையில், மற்றொரு கார் மீது அஜித்தின் கார் மோதி 3 முறை அந்தர் பல்டி அடித்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் எவ்வித காயமும் ஏற்படாமல் அஜித்குமார் உயிர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.