அமெரிக்காவின் FBI புலனாய்வு துறையின் 9-வது இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் பதவியேற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் FBI இயக்குனராவது இதுவே முதன்முறை ஆகும். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
44 வயதான காஷ் படேல், அதிபர் ட்ரம்பின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
காஷ் படேலின் பெற்றோர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். நியூயார்க் கார்டன் சிட்டியில் பிறந்த காஷ் படேல், ரிச்மன்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், பேஸ் சட்டப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய காஷ் படேல், அமெரிக்க நீதித்துறையில் பயங்கரவாதம் குறித்த வழக்குகளைக் கையாளும் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டோபர் மில்லரின் தலைமை அதிகாரியாக காஷ் படேல் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்பு, அமெரிக்க அதிபரின் துணை உதவியாளராகவும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பயங்கரவாத எதிர்ப்பு துறையின் மூத்த இயக்குநராகவும் காஷ் படேல் பணியாற்றியுள்ளார்.
புலனாய்வுக்கான நிரந்தர தேர்வுக் குழுவின் மூத்த ஆலோசகராக காஷ் படேல் பணியாற்றினார். 2016 ஆம் ஆண்டு, அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வந்த விசாரணைக்கு காஷ் படேல் தலைமை தாங்கினார்.
ஏற்கெனவே, காஷ் படேல் பதவியில் இருக்கும் போதுதான், ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல்-பாக்தாதி, அல்-காய்தாவின் காசிம் அல்-ரிமி ஆகியோர் கொல்லப்பட்டனர். உலகெங்கிலும் உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புகளுக்காக நிதியளிக்கும் சட்டங்களை கொண்டு வந்ததும் காஷ் படேல்தான்.
காஷ் படேல் நடத்திவரும் `திரிசூல்’ நிறுவனம், 2023ம் ஆண்டில், ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும், ட்ரம்ப் உருவாக்கிய ‘அமெரிக்காவை பாதுகாப்போம்’ (Save America) திட்டத்துக்கும் காஷ் படேலின் திரிசூல் நிறுவனம்தான் ஆலோசனை வழங்கியுள்ளது.
ட்ரம்பின் முந்தைய ஆட்சிக் காலத்தில், வெள்ளை மாளிகை எடுத்த பல முக்கிய நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்த காஷ் படேல் , அமெரிக்காவின் FBI புலனாய்வு துறையின் 9-வது இயக்குநராக பதவியேற்றுள்ளார்.
இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதையின் மீது பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பதவியேற்றபின் உரையாற்றிய காஷ் படேல், FBI-க்கு உள்ளேயும், அதற்கு வெளியேயும் பொறுப்புடன் செயல்படுவேன் என்றும் காஷ் படேல் உறுதி அளித்தார்.
மேலும், தமது குடும்பத்தினர், நண்பர்கள், சகோதரி நிஷா, மருமகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் பகவத் கீதை புத்தகத்தை கையில் வைத்திருந்த பெண்ணை தமது அழகான காதலி அலெக்சிஸ் உடன் இருக்கிறார் என்றும் கூறினார்.
அலெக்சிஸின் பெயரைக் குறிப்பிட்ட உடனேயே, பார்வையாளர்களிடமிருந்து கூக்குரல்கள் எழுந்தன. அதற்கு காஷ் படேல், அலெக்சிஸ் தனது அழகான காதலி என்பதை ஒப்புக் கொள்வதாக தெரிவித்தார்.
காஷ் படேலின் காதல் கதை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. 26 வயதான அலெக்சிஸ் வில்கின்ஸ், காஷ் படேலை விட 18 வயது இளையவர் ஆவார். 8 வயதில் தனது முதல் பாடலை எழுதிய அலெக்சிஸின் முதல் ஆல்பமான ‘Grit‘ ,iTUNES ல், 4வது இடத்தைப் பிடித்தது. Country Back என்ற பாடல், ஐடியூன்ஸ் தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. God Bless The USA என்ற பாடல், அதிபர் ட்ரம்புக்கு மிகவும் பிடித்த பாடலாகும். இந்த பாடல் அலெக்சிஸ் இசையில் உருவானது என்பது குறிப்பிடத் தக்கது.
2022 அக்டோபர் மாதத்தில், காஷ் படேலும் அலெக்சிஸ் வில்கின்ஸும் முதன்முதலில் சந்தித்தனர். 2023ம் ஆண்டு முதல் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், திருமணமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு,காஷ் படேல், மனைவி ரித்திகாவை விவாகரத்து செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமண முறிவுக்கு, அலெக்சிஸுடன் ஆன காஷ் படேலின் காதலே காரணம் என்றே சொல்லப்படுகிறது. மேலும், காஷ் படேல் தனது முன்னாள் மனைவிக்கு ஒரே நேரத்தில் மொத்தமாக 2 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.