மணப்பாறை அருகே நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெஸ்டோ நகரில் 8-ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில் திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த 13 காளைகளும், ஒரு குழுவுக்கு 9 வீரர்கள் வீதம் 13 குழுக்களாக 117 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
கூடியிருந்த பொதுமக்களின் ஆரவாரத்திற்கிடையே சீறிப்பாய்ந்து நின்று விளையாடிய காளைகளை அடக்கி வெற்றி பெற, வீரர்கள் போட்டிபோட்டு மல்லுக்கட்டினர்.
போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. விறுவிறுப்பாக நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை திரளான பொதுமக்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.