குளித்தலை அருகே 10ஆம் வகுப்பு மாணவி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடவூர் தாலுகா பூசாரிபட்டி பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் 15 வயது மகள், தரகம்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இரவு கழிவறைக்கு செல்வதாகக் கூறிச் சென்ற அவர் திடீரென காணாமல் போய் உள்ளார்.
உறவினர்களுடன் சேர்ந்து தேடியபோது மகள் கழுத்தறுப்பட்டு ரத்த வெள்ளத்தில் வாய் பேச முடியாமல் வந்ததைக் கண்டு தந்தை அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக, ஆம்புலன்ஸ் மூலம் குஜிலியம்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், தப்பியோடிய 2 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே, மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு காவல்துறை மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், இரவு வீட்டில் தனியாக இருந்த மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட அதே பகுதியை சேர்ந்த மாணவர் வெளியே வரவழைத்து கழுத்து பகுதியில் கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி அணிந்திருந்த ஒரு சவரன் செயினையும் மாணவர் பறித்துச் சென்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மாணவர் குறித்து மாணவி இழிவாகப் பேசியதால் கோபத்தில் இந்த செயலை மாணவர் மேற்கொண்டாகவும், மாணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.