காலநிலை மாற்றத்தை சமாளிக்க, உலகின் மிகச் சிறிய தீவான நௌரு தீவு பாஸ்போர்ட்களை விற்க திட்டமிட்டுள்ளது. நவ்ரு தீவு எங்கே உள்ளது? ஏன் தனது பாஸ்போர்ட்களை விற்கிறது? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
PLEASANT ISLAND என்று அழைக்கப்படும் தீவு தான் நௌரு தீவு. அழகிய கடற்கரைகள் மற்றும் இதமான சூட்டுடன் வீசும் காற்று என அமைதியாக ஓய்வெடுக்க உலகில் ஒரு இடம் உண்டென்றால் அது நௌரு தீவுதான்.
பவளப்பாறைகள், பனை மரங்களால் வரிசையாக அமைந்த அழகிய வெள்ளை மணல் கடற்கரைகள், நன்னீர் ஏரிகள், சுண்ணாம்புக் குகைகள் என அழகாக விளங்கியது இந்த நௌரு தீவு.
தொலைதூர பசிபிக் பெருங்கடல் நாடான நௌரு தீவு வெறும் 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். நௌரு தீவு உலகின் மூன்றாவது சிறிய நாடாகும். இந்த நாட்டின் மொத்த சாலைகளின் நீளம் வெறும் 30 கிலோமீட்டர் தான். 12 பழங்குடியினர் குழுக்கள் வாழ்வதால், நாட்டின் கொடியில் 12 நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சிறிய நாட்டில் மொத்தம் 10,000 மக்களே வசிக்கின்றனர்.
தனக்கென தனியாக எந்த நிதி ஆதாரமும் நிதி முதலீடும் இல்லாத நாடாக நௌரு தீவு உள்ளது. நாட்டின் நாணயமாக ஆஸ்திரேலிய டாலரே உள்ளது. ஒரு ஜனநாயக நாடான நௌருவில், அதிபரே நாட்டின் தலைவராகவும் அரசு தலைவராகவும் செயல்படுகிறார்.
பல ஆண்டுகளாகவே, (phosphate mining) பாஸ்பேட் சுரங்கம் தோண்டப்படுவதால், மொத்த தீவும், தரிசு நிலமாக மாறிவிட்டது.
மேலும், காலநிலை மாற்றத்தால், கடல் மட்டம் உயர்வதும், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் என, நௌரு தீவில் தாழ்வான வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
10,000 மக்களை மீள் குடியேற்றம் செய்வதற்கான செலவை ஈடுசெய்ய, அதிபர் டேவிட் அடியாங் 65 மில்லியன் டாலர் நிதி திரட்ட முடிவெடுத்துள்ளார். இந்த நிதியில், புதிய டவுண்ஷிப், ஓய்வெடுக்கும் பண்ணைகள் மற்றும் அலுவலகங்கள் கட்டப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக, நாட்டின் குடியுரிமை பாஸ்போர்ட்டை விற்க அதிபர் டேவிட் அடியாங் திட்டமிட்டுள்ளார். இந்த திட்டத்தின் படி, நௌரு நாட்டின் குடியுரிமை 1 லட்சத்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப் படுகிறது.
இந்தப் பணத்தைச் செலுத்தினால் நான்கு மாதங்களுக்குள், நௌரு நாட்டின் குடியுரிமை வழங்கப் படும். இப்படி நௌரு நாட்டின் குடியுரிமை பெறும் வெளிநாட்டினர், உண்மையில் நௌரு தீவுக்குச் செல்லவோ அல்லது அங்கு தங்கவோ மாட்டார்கள்.
அதற்குப் பதிலாக, ஹாங்காங், சிங்கப்பூர், பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 107 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
நௌரு நாட்டின் குடியுரிமை பெற குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்றும், சட்டபூர்வமான முறையில் பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் 130,000 அமெரிக்க டாலரும், இரண்டு முதல் நான்கு உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்துக்கு 137,500 அமெரிக்க டாலரும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்துக்கு 145,000 அமெரிக்க டாலரும் கட்டணமாக நிர்ணயிக்க பட்டுள்ளது.
மேலும்,நௌரு நாட்டின் குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்கள் எந்த நாட்டிலும் எந்த குற்றப் பின்னணியும் சட்ட வழக்கும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.
வரும் ஜூன் முதல் அடுத்த 12 மாதங்களில் இந்தத் திட்டத்திலிருந்து சுமார் 9 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் கிடைக்கும் என்று நௌரு அரசு கணித்துள்ளது.