ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈஷா யோகா மையத்தில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோவையைச் சேர்ந்த சிவஞானன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிவராத்திரி விழாவின்போது விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ராஜசேகர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மகா சிவராத்திரி விழாவின்போது அனைத்து சட்ட விதிகளும் பின்பற்றப்படுவதாகவும்,
விதிகள் அமல்படுத்தப்படுவதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில், இரவு நேரத்தில் ஒலிபெருக்கியை பயன்படுத்தினாலும் 12 மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று வாதிடப்பட்டது.
தொடர்ந்து கழிவுநீர் மேலாண்மை மற்றும் ஒலி மாசுவை தவிர்க்க ஈஷா மையத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது என்றும், மனுவை ஏற்க எந்த முகாந்திரமும் இல்லையெனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.