அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் திட்டமிட்டப்படி இன்று நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள் சங்கத்தினர் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்தும், மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் இன்று ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவினருடன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்குமாறு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக அரசு தங்களின் கோரிக்கைகளை நிராகரிக்கவில்லை என்றும், 4 வாரங்கள் அவகாசம் கேட்டுள்ளதாகவும் கூறினார்.
எனினும், ஊழியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறோம் என்றும், மறியல் போராட்டமாக இல்லாமல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.