தமிழகத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2014-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆயிரத்து 303 கிலோ மீட்டர் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 2 ஆயிரத்து 242 கிலோ மீட்டர் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், 715 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாலங்கள் கட்டப்பட்டிருப்பதாக கூறிய ஆளுநர், 19 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 8 வந்தே பாரத் நவீன ரயில்கள் இயக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
33 ஆயிரத்து 467 கோடி ரூபாய் செலவில் புதிய தண்டவாளங்கள் அமைக்கும் திட்டங்கள் மட்டுமின்றி, 77 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கப்பட்ட அம்ரித் பாரத் நிலையங்களாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.