திருச்சி உப்பிலியபுரம் பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் வராமலேயே வருகை புரிந்ததாக, பதிவேட்டில் குறிப்பு எழுதிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கானாபாடியில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில், செயல்படும் அரசு உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் 5 மாணவர்கள் மட்டுமே பயிலும் நிலையில், தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக வருகை பதிவேட்டில் மாணவர்கள் வகுப்பிற்கு வந்ததுபோல தலைமை ஆசிரியர் ரமாதேவி குறிப்பு எழுதி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஆதி திராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் ஆனந்திடம் விசாரித்தபோது, அவரும் மழுப்பலான பதிலை அளித்துள்ளார். எனவே, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாசியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.