திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே பாலியல் சீண்டல் புகாரின் பேரில் தற்காலிக ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காவலூர் மலைரெட்டியூரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிரபு என்பவர் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவிகள் சைல்டு ஹெல்ப்லைன் எண்ணான 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் நேரில் விசாரணை நடத்திய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்காலிக உதவி ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.