“DEEP SEEK” செயற்கை நுண்ணறிவு செயலி தீங்கு விளைவிக்கும் என்றால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டியது தானே என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வடிவமைத்த “DEEP SEEK” செயற்கை நுண்ணறிவு செயலி, இந்திய பயனாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதனை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த 12-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக வழக்கறிஞர் ஒருவரை வழக்கில் இணைக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக்கோரி தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா அமர்வில் முறையிடப்பட்டது.
அப்போது, “DEEP SEEK” செயலியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ளதா என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பயனாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றால் அந்த செயலியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டியது தானே எனவும் கருத்து தெரிவித்தனர்.
மேலும், அவசர வழக்காக விசாரிக்கும் அளவிற்கு முகாந்திரம் இல்லை என்பதால், வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.