கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டி மற்றும் தாமோதரன் ஆகியோரின் ஜாமின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி, கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இந்நிலையில், இவ்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளான கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா மற்றும் பரமசிவம் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
மனு மீதான விசாரணை நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் கடந்த 8 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முக்கிய குற்றவாளிகளான கண்ணுக்குட்டி மற்றும் தாமோதரன் மீது ஏற்கனவே, கள்ளச்சாராய கடத்தல் தொடர்பாக 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என வாதிட்டார்.
சிபிஐ தரப்பு வாதத்தை ஏற்று கண்ணுக்குட்டி, தாமோதரன் ஆகியோருக்கு ஜாமின் வழங்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், விஜயா மற்றும் பரமசிவம் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.