கடந்த 45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெறவுள்ளதால், லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 63 கோடிக்கும் அதிகமானோர் கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடி உள்ளனர்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். கடந்த 45 நாட்களாக விமரிசையாக நடைபெற்று வரும் மகா கும்பமேளா, மகா சிவராத்திரி தினமான இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அயோத்தி தாம் ரெயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. மகா சிவராத்திரி விழாவையொட்டி பிரயாக்ராஜ் முழுவதும் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக மருத்துவர்கள், காவலர்கள், நிர்வாக அதிகாரிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் பகுதியில் நீராடுவதற்கும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.