கோவை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா இன்று மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், பீளமேடு பகுதியில் பாஜக அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மத்திய உள்துறை அமித் ஷாவிற்கு தமிழ் வாழ்க என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட மாலையை அணிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு அளித்தார். அதேபோல் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் வரவேற்றனர். அப்போது அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ் கலாச்சாரத்தை சித்தரிக்கும் திருப்புடைமருதூர் ஓவியங்கள் அடங்கிய புத்தகம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
இன்று மாலை 4 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையம் செல்லும் அமித்ஷாவுக்கு, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளார். மேலும், அங்கு நடைபெறும் மகா சிவராத்திரி விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார்.
மேலும், 5 மாவட்டங்களில் பாஜக அலுவலகங்களை அவர் திறந்து வைக்க உள்ளார். மத்திய அமைச்சர் வருகையொட்டி கோவை மாநகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.