போக்குவரத்து துறையில் புதிய புரட்சியாக கருதப்படும் ஹைப்பர் லுாப் ரயில்களை இயக்குவதற்கான சோதனை தடத்தை சென்னை ஐஐடி தயார் செய்துள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் நிதியுதவியுடன், ஹைப்பர்லுாப் ரயில்களை இயக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளது. சென்னை தையூரில் உள்ள அதன் வளாகத்தில் 422 மீட்டர் நீளத்துக்கு ஹைப்பர்லுாப் ரயில் சோதனை தடம் தயார் நிலையில் உள்ளதாகவும், விரைவில் சோதனை நடத்தப்படும் எனவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
புதிதாக வளர்ந்து வரும் ஹைப்பர்லுாப் தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை நாம் எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்திற்காக 17 கோடியே 44 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த திட்டத்தின் வாயிலாக 350 கிலோ மீட்டர் துாரத்தை வெறும் 30 நிமிடங்களில் சென்றடைய முடியும் என தெரிவித்தார்.
மேலும், எதிர்கால போக்குவரத்து மேம்பாட்டுக்காக, கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஹைப்பர்லூப் ரயில்களை இயக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.