முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவாமல் இருக்க சாலையோரங்களின் இருபுறமும் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது இலையுதிர் காலம் நிலவி வருவதால் வனப்பகுதிகளில் வறட்சி துவங்கியுள்ளது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் நிலவும் கடும் வெயில் காரணமாக செடி கொடிகள் காய்ந்து கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால், காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள சாலைகளின் இருபுறமும் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், வனவிலங்குகளுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், வனப்பகுதிகளில் உள்ள செயற்கை தண்ணீர் குட்டைகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பும் பணியை மேற்கொண்டனர்.