ஆண்டுக்கு இரண்டு லட்சம் கழுதைகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தானுடன் சீனா ஒப்பந்தம் செய்துள்ளது. இது இருநாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் வர்த்தகத்தின் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து கழுதைகளை சீனா இறக்குமதி செய்வதற்கான காரணம் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு..
உலகத்தின் கழுதைகள் அதிகம் வாழும் மூன்றாவது பெரிய நாடு பாகிஸ்தான் ஆகும். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானில் கழுதைகள் நுகர்வுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. ஆகவே, அந்நாட்டில் கழுதைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுமார் 5 கோடிக்கும் அதிகமான கழுதைகள் பாகிஸ்தானில் உள்ளன.
இந்நிலையில், ஆண்டு தோறும் இரண்டு லட்சம் கழுதைகளைப் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய சீனா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தந்ததின் படி, கழுதை இறைச்சி மற்றும் தோல்களைப் பாகிஸ்தான் சீனாவுக்கு வழங்குகிறது.
சீன பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்து வரும் கழுதையின் பொருட்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இந்தக் கழுதை ஏற்றமதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, கழுதையின் தோலில் இருந்து எஜியோவோ என்னும் ஜெலட்டின் தயாரிக்கப்படுகிறது. இது, சீன பாரம்பரிய மருத்துவத்தில் பல நோய்களுக்கான மருந்துகளின் மூலப் பொருளாகும்.
இந்த எஜியோவோ என்பது, இரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்கும், தோல் நோய்களைக் குணப் படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
கழுதைத் தோலில் உள்ள பெறப்படும் எஜியாவோவின் சந்தை மதிப்பு ஆண்டுதோறும் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
இதன் காரணமாக, ஆண்டுதோறும், 4 கோடிக்கும் அதிகமான கழுதை தோல்கள் சீனாவுக்குத் தேவைப்படுகிறது. மருத்துவத் தேவைக்கு ஏற்ப கழுதைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் குறைந்து வருகிறது.
மருத்துவப் பயன்பாட்டையும் தாண்டி, சீனாவில் , கழுதை இறைச்சி,பெரும்பாலான சீனர்களின் விருப்பமான உணவாகும். குறிப்பாக, சீனாவின் ஹேபெய் மாகாணத்தில், கழுதை இறைச்சி பர்கர், பிரபலமான சாலையோர உணவாகும். இந்த வகையிலும்,சீனாவில்,கழுதை இறைச்சியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கழுதைத் தோல்களுக்காக மற்ற ஆப்பிரிக்க நாடுகளைத் தான் முதலில் சீனா நம்பியிருந்தது. ஆனால் ஆப்பிரிக்க ஒன்றியம் கழுதைத் தோல்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. எனவே, இப்போது சீனா, பாகிஸ்தானில் இருந்து, கழுதை தோல்கள் மற்றும் இறைச்சியை இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது.
இந்தச் சூழலில், சீனாவுக்கான முக்கிய கழுதை ஏற்றுமதியாளராக பாகிஸ்தான் மாறியுள்ளது. இந்த கழுதை ஒப்பந்தத்தின் மூலம் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வர்த்தகத்தை சீனாவுடன் பாகிஸ்தான் செய்யும்.
ஏற்கெனவே, பாகிஸ்தானில் இருந்து செம்பு,பருத்தி, பல்வேறு வகையான தாதுக்கள், மீன் மற்றும் தோல் உள்ளிட்ட பல பொருட்களை சீனா இறக்குமதி செய்து வருகிறது. அந்த வரிசையில், இந்த கழுதை ஒப்பந்தம் சீன-பாகிஸ்தான் இடையேயான ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தமாகும்.
அரசியல் குழப்பம், மற்றும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு இது ஒரு நிவாரணமாக அமையும் என்றும் பாகிஸ்தானின் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கராச்சி துறைமுகத்துக்கு அருகில் புதிய கழுதை இறைச்சி கூடங்களை கட்டுவதற்கும் சீனா, பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும், இதற்காக, குவாதர் துறைமுகம் அருகில், புதிய கழுதை இறைச்சி கூடங்களைப் பாகிஸ்தான் கட்டி வருகிறது. இதன் மதிப்பு சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலராகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராமப்புற போக்குவரத்து முறையாகக் கருதப்படும் கழுதைகளைக் கொல்வதற்கு குவாதரில் உள்ள மதத் தலைவர்கள் உட்பட குவாதர் நகர மக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாத்தில் கழுதை இறைச்சி கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய உணவுச் சட்டங்களின் படி, பாகிஸ்தானில் கழுதை இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது.
கழுதை இறைச்சி, ஏற்றுமதி மட்டுமே செய்யப்படும் என்று பாகிஸ்தான் அரசு உறுதி செய்துள்ளது என்றாலும், சீனாவுடனான கழுதை ஒப்பந்தத்துக்கு, கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது.
எஜியாவோ உள்ளிட்ட கழுதையிலிருந்து பெறும் பொருட்களுக்கான சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 5.9 மில்லியன் கழுதைகள் கொல்லப்படுகின்றன. மேலும், கழுதைகள் கடத்தலுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
இப்படியே போனால், கழுதைகளின் எண்ணிக்கை குறைந்து உலகில் கழுதை இனங்கள் அழிந்து போகும் வாய்ப்ப்புள்ளதாகவும் சுற்றுசூழல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.