2026ம் கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்துவதற்கான வரைவுக் கொள்கையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இது குறித்து, பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதிக்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சமீபத்தில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி), கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் (கேவிஎஸ்) மற்றும் நவோதயா வித்யாலயா (என்விஎஸ்) ஆகியவை கலந்து கொண்டன.
தேசிய கல்விக் கொள்கையின்படி, உலகளாவிய பாடத்திட்டத்தை இந்திய கல்வி முறையில் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள தனியாக பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை மாற்ற, தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பரிந்துரைகள் கொடுக்கப் பட்டுள்ளன.
அதன் படி, தற்போதுள்ள தேர்வு முறையில் குறைபாட்டை மாற்றவும், தேர்வு குறித்த பயத்தைப் போக்கவும், மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் சி.பி.எஸ்.இ., பொது தேர்வுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.
ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவுக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, நடப்பு கல்வியாண்டு முதல், பத்தாம் வகுப்புக்கு இரு முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதன்மையாக திறன்கள் மற்றும் கல்வித் திறமைகளைச் சோதிக்கும் வகையில் பொது தேர்வுகள் எளிமையாக்கப்படும்.
அனைத்து மாணவர்களும் எந்தவொரு கல்வி ஆண்டிலும் இரண்டு முறை பொதுத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
ஒரு முறை மெயின் தேர்வையும், தேவைப்பட்டால், மதிப்பெண்ணை அதிகரிக்க மற்றொரு முறை ‘ இம்ப்ரூவ்மென்ட் ‘ தேர்வையும் எழுதிக் கொள்ளலாம்.
2026-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை முதல் கட்ட தேர்வு நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வு, மே 5ம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை நடைபெறும்.
இரண்டு பொது தேர்வுகளையும் மொத்தம் 34 நாட்கள் நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. மேலும், உள்ளீட்டு தேர்வுகளும் செய்முறை தேர்வுகளும் வரும் ஆண்டுகளிலும் ஒரேயொரு முறை மட்டுமே நடத்தப்படும்.
இரு முறை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அந்த மதிப்பெண் சான்றிதழை பத்தாம் வகுப்பு சான்றிதழாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இரண்டு முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டாலும், முழு பாடங்களையும் உள்ளடக்கிய கேள்விகள் தான் இரண்டு தேர்விலும் இடம்பெறும்.
மேலும், இரண்டு தேர்வுகளுக்கும், மாணவர்களுக்கு ஒரே தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்றும், இரண்டு தேர்வுகளுக்கும் தேர்வு கட்டணம் முதலிலேயே கட்டவேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது.
இந்த வரைவுக் கொள்கை குறித்து, தங்கள் கருத்துக்களைப் பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வரும் மார்ச் மாதம், 9 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் இறுதிக் கொள்கை வகுக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.