சாதி மத அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் லாபத்துக்காக, சாதி, மதம், மொழி ரீதியாக வாக்காளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதாக ராஜேஷ் அனுார் மகிமைதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்தல் பிரச்சாரம் , சாதி மத அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் பதில்மனுவை பதிவு செய்து கொண்டு மனுவை தள்ளுபடி செய்த ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, இந்தியா போன்ற பெரிய நாட்டில் மாற்றத்தை ஒரே இரவில் கொண்டு வரமுடியாது என்றும், ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்து வைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் குழந்தை பருவத்தில் தான் இருக்கிறது எனவும் தெரிவித்தனர்.
இந்த மாற்றங்கள் ஏற்பட இன்னும் சில காலம் ஆகும் எனவும், அப்போது சாதி மத அடிப்படையில் அரசியல் வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் என நம்புவதாகவும் கூறினர்.